சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பது அவசியம்; முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்
புதுச்சேரி; சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள், அதிகாரிகள் செயல்பட வேண்டும் என,முதல்வர் ரங்கசாமி பேசினார். புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா, கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்தது.விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பேசியதாவது:புதுச்சேரியில் அதிக புகையை கக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கலாமா, வேண்டமா என்பது பரீசிலனையில் உள்ளது. புதுச்சேரி சிறிய மாநிலம். இங்கு எப்படிப்பட்ட தொழிற்சாலைகள் வரவேண்டும் என்பதை அரசு உணர்ந்து அதற்கு ஏற்றவாரு சில முடிவுகளை எடுத்து வருகிறது.குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்துள்ளோம். மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து வழங்குங்கள்.மழை காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து வருவது, வாய்க்கால்கள் அடைத்துக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் தான் காரணம்.பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு 100 ஆண்டுகள் கூட ஆகும் என்று சொல்லப்படுகிறது. புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்துவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.புதுச்சேரியை பசுமையாக வைத்திருக்க வேண்டும் அதற்காக நல்லமரங்களை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மரம் வளர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பது அவசியம். அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள், அதிகாரிகள் செயல்பட வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.