கேள்வி நேரம் இன்றி பட்ஜெட் கூட்ட தொடர் துவங்குகிறது :குறுகிய நாட்களே இருப்பதால் அரசு முடிவு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் இந்த முறை கேள்வி பதில் நேரம் இல்லாமல் நடக்க உள்ளது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி கவர்னர் உரையுடன் முறைப்படி தொடங்குகிறது. நிதித்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி, மாலையில் மாநிலத்தின் ரூ. 14,100 கோடிக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பான இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. எனினும், இம்முறை கூட்டத்தொடர் சில அரசியல் மற்றும் நிர்வாக மாறுதல்களுடன் நடைபெறவுள்ளது. நிரந்தர சபாநாயகர்:: வழக்கமாக சட்டசபையில் நிரந்தர சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகே பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது மரபு. ஆனால், ஆளும் என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., இடையே நிரந்தர சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் தொடரும் இழுபறி இன்னும் தீரவில்லை. கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான பூர்வாங்கப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால், தற்காலிக சபாநாயகராகப் பொறுப்பில் உள்ள அன்பழகன் தலைமையில் இக்கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. கேள்வி நேரம் ரத்து:: பட்ஜெட் கூட்டத்தொடரில் கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாட்களைத் தவிர்த்து, பிற நாட்களில் கேள்வி நேரமும், பூஜ்ய நேரமும் இடம்பெறுவது வழக்கமானது. இதில் மக்கள் பிரச்னைகளை எம்.எல்.எம்., சட்டசபையின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்ப்பது வழக்கம். எம்.எல்.ஏ-க்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய துறைகள் பதில் தயார் செய்து அளிக்க குறைந்தபட்சம் 14 நாட்களாவது தேவைப்படும். வழக்கமாக இச்செயல்முறை ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடும். இம்முறை போதுமான கால அவகாசம் இல்லாததால், சட்டசபை செயலகம் எம்.எல்.ஏ-க்களிடம் இருந்து கேள்விகளைப் பெறவில்லை. இதன் காரணமாக, கேள்வி நேரம் இல்லாமலே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னரும் 2021-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் இதுபோன்று கேள்வி நேரம் இல்லாமல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள்:: வரும் 24-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன், உடனடியாக சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய உள்ளது. நடப்பு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் இடைக்கால பட்ஜெட் காலம் நிறைவடைகிறது. அதற்குள் முழுமையான பட்ஜெட்டுக்குச் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், வரும் 31-ம் தேதி வரை சட்டசபைக் கூட்டம் நடத்தப்பட பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக இக்கூட்டத்தொடர் அதிகபட்சமாக 6 நாட்கள் மட்டுமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.