பஸ் நிலைய கடைகளை திறக்க ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மனு
புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியை சந்தித்து மனு அளித்தார். மனுவில், புதுச்சேரி நகரப் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ள அண்ணா திடல் மற்றும் அதனை சார்ந்த கடைகள், பஸ் நிலைய கடைகள், உப்பளம் மீன் அங்காடி ஆகியவற்றை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, கடற்கரை சாலையை நிர்வாகிகளுடன் நடந்து சென்று பார்வையிட்டு, அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக புதுச்சேரியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதுச்சேரி காவல்துறைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் வழங்க தயாராக உள்ளதாக மார்ட்டின், சீனியர் எஸ்.பி., கலைவாணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கடிதம் வழங்கினார். அதில் காவல்துறை அனுமதி அளித்தால் உடனடியாக சி.சி.டி.வி., கேமராக்களை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போது, லட்சிய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் பிரபாகரன், மண்டல பொதுச்செயலாளர்கள் கண்ணபிரான், சுரேஷ் மற்றும் விஜய்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.