உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கோவில் நிலம் மோசடி வழக்கு சப் - கலெக்டர் ஜான்சன் சிறையில் அடைப்பு

காரைக்கால் கோவில் நிலம் மோசடி வழக்கு சப் - கலெக்டர் ஜான்சன் சிறையில் அடைப்பு

காரைக்கால்:காரைக்கால் மாவட்டம், கோவில்பத்து கிராமத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை 'பிளாட்' போட்டு விற்க முயற்சி நடந்தது. போலீசார் வழக்கு பதிந்து இடைத்தரகர்கள் சிவராமன், திருமலை, போலி லே-அவுட் தயார் செய்த நகராட்சி நில அளவையாளர் ரேணுகாதேவி, போலி ஆவணம் தயார் செய்த டாக்குமென்ட் ரைட்டர் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான என்.ஆர்.காங்., பிரமுகர் ஜே.சி.பி., ஆனந்த் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நில அளவையாளர் ரேணுகாதேவியை, போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரின் உறவினர்களுக்கு விற்க முன்பணம் பெறப்பட்டது தெரிந்தது. இந்த நில மோசடிக்கு, சப் - கலெக்டர் ஜான்சன் தலைமையில் கூட்டு சதி நடந்ததும் உறுதியாக தெரிந்தது.அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் பகல் 2:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்த சப் - கலெக்டர் ஜான்சனை, தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். பின், அவரை இரு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.அவர் அளித்த தகவலின்படி, நில மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை நேற்று பறிமுதல் செய்தனர்.பின், அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து, நேற்று மதியம், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லிசி முன் ஆஜர்படுத்தினர்.போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி லிசி, சப் கலெக்டர் ஜான்சனை, வரும் 25ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் படி, அவரை காரைக்கால் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !