புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பாராட்டு
புதுச்சேரி: சர்வதேச அளவில் சாதனை படைத்த, புதுச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஹிந்தி துறை தலைவர் ஜெய்சங்கர். இவர் கடந்த, செப்.5,ம் தேதி, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம், சிறந்த ஆசிரியர் விருது பெற்றார். இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆசிரியர்களில் இவரும் ஒருவர். இதுவரை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது, உயர்கல்வி ஆசிரியர்களுக்காக, முதல் முறையாக வழங்கப்பட்டது. அதேபோல புதுச்சேரி பல்கலைக்கழக துணைப்பேராசிரியை பவித்ராவின், நாடகத்துறை பங்களிப்பிற்காக அவருக்கு கர்நாடக அரசு, 2023-24,ம் ஆண்டிற்கான நாடக அகாடமி விருதை அண்மையில் வழங்கியது. மேலும், 2024,ம் ஆண்டிற்கான முதல், 2 சதவீத விஞ்ஞானிகளின், சர்வதேச அளவிலான தரவரிசை பட்டியலை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செந்தில் குமார், சுப்ரமணியா, மணிகண்டன், முருகன், ஜோசப் செல்வின், சேகல் கிரண், ஸ்ரீகுமார், கிருஷ்ண குமார் ஜெய்ஸ்வால், சித்தார்தா புசி, சக்திவேல், பினோய் கே சஹா, பவுமிக், ஹன்னா வசந்தி ஆகிய 13 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதனையாளர்களை, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு, இயக்குனர் கிளமென்ட் லுார்து , பதிவாளர் ரஜ்னீஷ் பூடானி, டீன்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் பாராட்டினர்.