மானியம் பெற நில உச்சவரம்பு குறைப்பு; அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
புதுச்சேரி; விவசாயிகள் பயன் பெறும் வகையில், குழாய் கிணறு மற்றும் நீர் மூழ்கி மோட்டார் பொருத்திட வழங்கப்பட்டு வரும் மானியம் பெறுவதற்கான நில உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் செய்திக்குறிப்பு; 2024 - 25ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத் தொடரின், நிதிநிலை அறிக்கையில் அளித்த உத்திரவாதத்தின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில் (2025-26) கீழ்கண்ட திட்டங்களில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குழாய்க் கிணறு அமைக்கவும், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தவும் வழங்கப்பட்டு வரும் மானியம் பெருவதற்கு, தற்போதுள்ள நில உச்சவரம்பு பொது விவசாயிகளுக்கு ஒன்றரை ஏக்கரிலிருந்து 1 ஏக்கராகவும், அட்டவணை இன விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் இருந்து அரை ஏக்கராகவும் குறைக்கப்படுகிறது. மேலும், மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான விண்ணப்பங்களை நீர்நிலவியலாளர் --II அலுவலகம், மாநில நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மண்வளப் பாதுகாப்பு, வேளாண் கூட்டு வளாகம், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி 605009 என்ற முகவரியிலும், மற்றும் அந்தந்த கிராமப்பகுதிகளில் உள்ள உழவர் உதவியகங்கள் அல்லது வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணையதள முகவரியான https://agri.py.gov.in- லிருந்து பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.