உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபான விலை, வாகன பதிவு கட்டணம் உயருகிறது அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

மதுபான விலை, வாகன பதிவு கட்டணம் உயருகிறது அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது.அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய்சரவணன்குமார் தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர்கள் கலந்து கொண்டனர்.இரவு 8:10 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 9:40 மணி வரை நடந்தது. இக்கூட்டத்தில் புதுச்சேரியில் நலத்திட்டங்களுக்கு அதிகரித்து வரும் நிதி சுமை, அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மக்கள் திட்டங்கள்

தொடர்ந்து, அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக புதிய மதுபான தொழிற்சாலைகள், மதுபானக்கடைகள் உரிமம் தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுபான உரிம கட்டணம், கலால் வரியை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. வருவாய் அதிகரிப்பின் ஒரு பகுதியாக மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிமக் கட்டணத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.பட்ஜெட்டில் பல புதிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது. பெண்களுக்கான உரிம தொகைக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே வருவாயை அதிகரிக்க முடிவு செய்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஒவ்வொரு நலத்திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் நிதி விபரங்கள் ஒருங்கிணைந்து விவாதிக்கப்பட்டன. இந்த கோப்புகள் கவர்னர் அனுமதிக்காக விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

புதிய மதுபான தொழிற்சாலை

கடந்த கேபினெட் கூட்டத் தொடரில் புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழ்நிலையில் புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தரும் முடிவினை அரசு தற்காலிக தள்ளி வைத்துள்ளது.கவர்னரும் அனுமதி தராத சூழ்நிலையில் சில விளக்கங்களை கேட்டு அந்த கோப்பினை திருப்பி அனுப்பினார். எனவே மதுபான தொழிற்சாலை அனுமதிக்காக திருத்தங்களுடன் கூடிய கோப்பு மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அரசு பணியிடங்கள்

அரசு துறைகளில் 10 ஆயிரம் காலிபணியிடங்கள் உள்ள சூழ்நியைலில் இதுவரை 2,500 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் ஓராண்டுகள் உள்ள சூழ்நிலையில் அனைத்து அரசு பணியிடங்களையும் நிரப்ப ஆலோசிக்கப்பட்டது.எல்.டி.சி., உள்ளிட்ட அரசு பணியிடங்கள் விரைந்து நிரப்புவது, அதற்கான தடைகளை களைவதுமாக குறித்து கேபினெட்டில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.

வாகன பதிவு கட்டணம்

புதுச்சேரியில் வருவாயை தரும் அரசு துறைகளில் போக்குவரத்து துறை முக்கிய இடத்தில் உள்ள சூழ்நிலையில், வருவாயை அதிகரிக்க வாகனப்பதிவு கட்டணத்தை உயர்த்தவும் விவாதிக்கப்பட்டது.இந்த கோப்புகள் அனைத்தும் கவர்னர் அனுமதிக்காக விரைவில் அனுப்பப்பட உள்ளன. கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் முதல்வர், அமைச்சர்கள் மக்களுக்கு எடுத்துரைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை