செய்தி சில வரிகளில்
தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் விழா
புதுச்சேரி பா.ஜ., சார்பில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா 107 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, பண்டிட் தீனதயாள் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், ராமலிங்கம் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் மவுலிதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு துப்புரவு பணி
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் திருபுவனை மேம்பாலம் அருகில் நடந்த சிறப்பு துப்புரவு பணியை ஆணையர் எழில்ராஜன் தொடங்கி வைத்தார். பணி மேற்பார்வையாளர் சச்சிதானந்தம், எல்.டி.சி., ரமணராஜ், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலக சேவக் லதா உடனிருந்தனர். எச்.பி., ஸ்கொயர் நிறுவன மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து துப்பரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் துப்புரவு பணியை மேற்கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். பெற்றோர்- ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். கூட்டத்தில், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, பெற்றோர்கள் கருத்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து கடந்தாண்டு பொதுத் தேர்வுகளிட் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர் ரேணு நன்றி கூறினார். விழிப்புணர்வு ஓவிய போட்டி
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் துாய்மை சேவை திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது. கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியை, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், வருவாய் பிரிவு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வரும் 2ம் தேதி நடைபெறும் காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது. ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கனுாரில் நேற்று நடந்தது. திட்ட அதிகாரி பாலாஜி தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி சக்திதரன் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் ரத்த சோகை நோய் பாதிப்புகள் மற்றும் அதனை சரி செய்ய எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, ஊட்டச்சத்து பொருட்களின் கண்காட்சி மற்றும் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
காரைக்காலில், கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கலெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சப் கலெக்டர்கள் ஜான்சன், வெங்கடகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.முகாமில் கலெக்டர் பேசுகையில், அரசு ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் பணி செய்ய வேண்டும். நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்றினால் மக்கள் பாராட்டுவர் என்றார். லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், ராமன் ஆகியோர் அரசு ஊழியர்களுக்கு லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர். ஆலோசனை கூட்டம்
காரைக்காலில் டெங்கு பரவலை தடுப்பது குறித்து நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பருவ மழை காலத்தில் டெங்கு நோய் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ் கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்டறிந்து அழிப்பது, நோய் தாக்கம் உள்ள பகுதிகளில் புகை மருந்து அடிப்பது, உள்ளாட்சி துறைகள் சார்பில் துப்பரவு பணி மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டது. அறிவியல் கண்காட்சி
வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். கண்காட்சியின் தங்கள் படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு விளக்கினர். கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் வரவேற்றார். ஆசிரியர் கண்ணம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கண்காட்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றன. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கமலம், தர்மாம்பாள் செய்திருந்தனர்.