ரொட்டி பால் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரி: ரொட்டி, பால் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க அரசாணை வெளியிடப்பட உள்ளது என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம்:கொல்லப்பள்ள சீனிவாச அசோக்(சுயேச்சை):ரொட்டி, பால் ஊழியர்களுக்கு போதிய சம்பள உயர்வு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். சம்பளம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படுமா?அமைச்சர் நமச்சிவாயம்: ரொட்டி, பால் ஊழியர்கள் 2 மணி நேரம் மட்டும் தான் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டுமா என அதிகாரிகள் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக கவர்னரும் கேட்டறிந்தார். இதுகுறித்து கவர்னரிடம் விளக்கம் அளித்துள்ளோம். அவர்கள் இரண்டு மணி நேரம் மட்டும் வேலை செய்யவில்லை. காலை முதல் மாலை வரை பணியில் இருக்கின்றனர். இதனை விபரமாக கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். இதை கோப்பில் குறிப்பிடும்படி கவர்னர் அறிவுறுத்தினார். அதை குறிப்பிட்டு கோப்பு அனுப்பியுள்ளோம். இதனால் கவர்னர் அனுமதி விரைவில் கிடைக்கும். ஒரு வாரத்தில் ரொட்டி, பால் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி அரசு ஆணை வழங்கப்படும். இதனை எம்.எல்.ஏ., மேசையை தட்டி வரவேற்றனர்.