| ADDED : ஜன 11, 2024 11:59 PM
புதுச்சேரி: சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, புதுச்சேரியில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தினசரி விபத்துகளும் ஏற்படுகிறது.இதையடுத்து, சாலைகளை சீரமைப்பது தொடர்பாக பொறியாளர்களை அழைத்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று ஆலோசனை நடத்தினார். பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் வேலைகளை துரிதப்படுத்தி முடிக்கவும், புதிய வேலைகளுக்கான மதிப்பீடுகளை தயார் செய்து ஒப்பந்தப் புள்ளிகளை கோரவும் உத்தரவிட்டார்.மேலும், சட்டசபையில் முதல்வர் அளித்த உறுதிமொழிகளின்படி பணிகளை முடிக்கவும் ஆலோசனைகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித் துறை சாலைகள் கோட்டங்களை சார்ந்த செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.