வாய்க்காலில் மாயமான வாலிபர்: ட்ரோன் மூலம் தேடும் பணி
புதுச்சேரி : துத்திப்பட்டு வாய்க்காலில் விழுந்த வாலிபரை ட்ரோன் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.வழுதாவூர் பக்கிரிப்பாளையம், ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் தீபன்ராஜ், 32; அவரது நண்பர்களான பிரபாகரன், குப்புசாமி ஆகியோருடன் கடந்த 1ம் தேதி மழையை சுற்றி பார்க்க துத்திப்பட்டு சுத்துக்கேணி, ஊசுட்டேரி வாய்க்கால் சென்றனர். துத்திப்பட்டு சுத்துக்கேணி வாய்க்கால் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வழுக்கி வாய்க்காலில் விழுந்துள்ளார்.மழைநீர் அதிக அளவில் சென்றதால் தீபன்ராஜ் அடித்து செல்லப்பட்டார். 2 நாட்களாக தீயணைப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் தீபன்ராஜ் கிடைக்கவில்லை. நேற்று சேதராப்பட்டு போலீசார் ட்ரோன் மூலம் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் ட்ரோன் மூலம் துத்திப்பட்டு வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். ஆனால் தீபன்ராஜ் கிடைக்கவில்லை.