எம்.எல்.ஏ.,பாதுகாப்பு அதிகாரி மூக்குடைப்பு:ஆசாமிக்கு வலை
புதுச்சேரி: எம்.எல்.ஏ., காரை வழிமறித்து, பாதுகாப்பு அதிகாரி மூக்கை உடைத்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். தேங்காய்திட்டு வடக்கு தெருவில் கடந்த 31ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர் தரிசனம் செய்தார். பின்னர், அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, அதேப்பகுதியை சேர்ந்த பரசுராமன்,41; திடீரென காரை வழிமறித்து எம்.எல்.ஏ., வை ஆபாசமாக திட்டினார். உடன், காரில் இருந்த எம்.எல்.ஏ.,வின் பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஷ்,39; கீழே இறங்கி சென்று, பரசுராமனை கண்டித்தார். ஆத்திரமடைந்த பரசுராமன், கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஜெகதீஷ் மூக்கில் குத்திவிட்டு, தப்பி ஓடிவிட்டார். அதில் படுகாயமடைந்த ஜெகதீஷ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, பரசுராமனை தேடிவருகின்றனர்.