உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு வழிமுறைகள் வெளியீடு: பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பங்கேற்க முடியும்

எம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு வழிமுறைகள் வெளியீடு: பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பங்கேற்க முடியும்

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வழிமுறைகளை சென்டாக் வெளியிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கப்பட்டது. அடுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த சென்டாக் முடிவு செய்துள்ளது. அத்துடன் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க

முதற்கட்ட கலந்தாய்வில் சீட்டு கிடைத்து கல்லுாரியில் சேர்ந்திருந்தாலும், சேராவிட்டாலும் அனைத்து மாணவர்களும் இரண்டாம் கட்ட மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதி பெறுகின்றனர்.எனவே, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தெலுங்கு சிறுபான்மையினர் மாணவர்களுக்கான இடங்கள், கிறிஸ்துவ சிறுபான்மையினர் நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ., மாணவர்கள் வரும் 16ம் தேதி வரை பதிவு கட்டணம் செலுத்தி, படிப்புகளை முன்னுரிமை கொடுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் விலக....

முதற்கட்ட கலந்தாய்வில் சீட் கிடைத்து கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள் அந்த சீட் தற்போது வேண்டாம் என்று கருதினால், தங்களுடைய டேஸ்போர்டு வாயிலாக வேண்டுகோள் கடிதத்தை நாளை 14ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கொடுத்து அனுப்பி விலகி கொள்ளலாம்.

பதிவு கட்டணம்

இளநிலை மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் பங்கேற்க விரும்பும் பொது, ஓ.பி.சி., எம்.பி.சி., இ.டபுள்.யூ.எஸ்., மீனவர், முஸ்லீம், பி.டி., பிரிவு மாணவர்கள் 10 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பங்கேற்க முடியும். எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுதிறனாளிகள் மாணவர்கள் 5 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தினால் போதுமானது. இப்பிரிவு மாணவர்கள் ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வில் சீட் கிடைத்து கல்லுாரியில் சேர்ந்திருந்தாலும், இந்த பதிவு கட்டணம் செலுத்தினால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ., பிரிவு மாணவர்கள் 2 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க முடியும். இதேபோல் பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்பி கிடைக்குமா?

இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்படவில்லையெனில் பதிவு கட்டணம் கட்டிய மாணவர்களுக்கு பணம் திரும்பி அளிக்கப்பட்டு விடும். ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டால், பதிவு கட்டணம் கல்வி கட்டணத்தில் சரி செய்யப்படும்.பதிவு கட்டணத்தை கழித்துக்கொண்டு மற்ற தொகையை கட்டினால் போதுமானது. அதேவேளையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டு, அம்மாணவர்கள் இடம் கிடைத்த கல்லுாரியில் சேரவில்லையெனில் கட்டிய பதிவு கட்டணம் முழுதுமாக திரும்பி தரப்படாது. சென்டாக் வழியாக அரசின் கஜானாவிற்கு சென்றுவிடும்.

முன்னுரிமை

இரண்டாம் கலந்தாய்வில் பங்கேற்க முடிவு செய்துள்ள அனைத்து மாணவர்களும் படிப்புகளை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய வேண்டும். இரண்டாம் கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டால், ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வில் அம்மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட் தானாகவே ரத்தாகிவிடும். மீண்டும் முதற்கட்ட கலந்தாய்வின்போது கிடைத்த கல்லுாரியில் சேர முடியாது. படிப்புகளை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யாமல் அப்படியே காலியாக விடப்பட்டு இருந்தால் அம்மாணவர்களுக்கும் சீட் ஒதுக்கப்படாது.

பணம் கட்ட...

கலந்தாய்வு பதிவு கட்டணம் அனைத்துமே சென்டாக் வங்கி கணக்கிற்கு நெட் பேங்கிங் வழியாக அதாவது என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ்., வழியாக கட்ட வேண்டும். இதற்கான வழிமுறைகள் மாணவர்களின் டேஸ்போர்டு வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி