உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அந்தஸ்துக்காக முயற்சி எடுக்கவில்லை ரங்கசாமி மீது நாராயணசாமி பாய்ச்சல்

மாநில அந்தஸ்துக்காக முயற்சி எடுக்கவில்லை ரங்கசாமி மீது நாராயணசாமி பாய்ச்சல்

புதுச்சேரி : புதுச்சேரியில் காங்., தலைமையில் இண்டியா கூட்டணி தேர்தலை சந்திக்கும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காததற்கு விமான பயணத்தை அவர் தவிர்ப்பது, அப்பா பைத்தியசாமி குருபூஜையும் காரணம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். ரங்கசாமிக்கு உயிர் மீது பயமா. முதல்வர் விமானத்தில் செல்ல பயம் என்றால் ரயிலிலோ, காரிலோ சென்றிருக்கலாம். பிரதமர் அறிவித்த கூட்டத்தை புறக்கணிக்க இது ஓர் காரணமா.மாநில அந்தஸ்து தான் குறிக்கோள் என கூறும் நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை பதிவு செய்திருக்க வேண்டும். சாமி கும்பிடுவதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தாகக் கூறுவது பிரதமரையும், நிதி ஆயோக் கூட்டத்தை அவமதிப்பதாக உள்ளது. மாநில அந்தஸ்துக்காக எந்த முயற்சியையும் முதல்வர் ரங்கசாமி எடுக்கவில்லை.புதுச்சேரியில் தேர்தல் சூடு பிடித்துள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் தொடர்வீர்களா என்ற கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில் தராமல் சென்றுள்ளார். ரங்கசாமி பா.ஜ., கூட்டணியில் சேராவிட்டால் கட்சி காணாமல் போய்விடும். இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார். பா.ஜ.,வை எதிர்த்து தேர்தலில் நிற்க முதுகெலும்பு இல்லை.புதுச்சேரியில் சட்டசபை கட்ட தலைமைச் செயலர் முட்டுக்கட்டையாக இருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சட்டசபை கட்ட ரூ.675 கோடி கேட்கிறார்கள். தற்போது சட்டசபை இருக்கும் இடத்தில் கட்டலாம். 33 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள சட்டசபைக்கு ரூ.675 கோடி தேவையா. மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல் ரூ.200 கோடியில் கட்டலாம். உள்நோக்கத்தோடு தலைமைச் செயலரை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது.காங்., கட்சிக்கு துரோகம் செய்தவர் ரங்கசாமி. துரோகம் செய்தோரை காங்.,ல் சேர்க்க மாட்டோம். அது எனது கருத்து. கட்சியில் சேர்ப்பது பற்றி கட்சி தலைமை முடிவு செய்தால் ஏற்பேன். தேர்தலை சந்திக்க ரங்கசாமியை விட நுாறு சதவீதம் தயாராக இருக்கிறோம். இண்டியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. புதுச்சேரியில் காங்., தலைமையில் இண்டியா கூட்டணி தேர்தலை சந்திக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை