உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தரமற்ற மருந்து கொள்முதல் விவகாரம்: அ.தி.மு.க.,விற்கு நாராயணசாமி பதிலடி

தரமற்ற மருந்து கொள்முதல் விவகாரம்: அ.தி.மு.க.,விற்கு நாராயணசாமி பதிலடி

புதுச்சேரி: புதுச்சேரியில், பா.ஜ., மூன்று அணியாக செயல்பட்டு வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; புதுச்சேரியில் 2019ம் ஆண்டு மருந்து வாங்கப்பட்ட விவகாரத்தில் என்னையும் இணைத்து சிலர் பா.ஜ., வின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்போது சுகாதார துறை அமைச்சராக மல்லாடி கிருஷ்ணராவ் இருந்தார். மருந்து வாங்குவது தொடர்பான கோப்புகள் என்னிடம் வராது. சுகாதார துறை இயக்குனர் அலுவலகம் வரையில் அந்த கோப்பு முடிந்துவிடும். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், இதில் சி.பி.ஐ., விசாரணை நடத்தவேண்டும் எனவும் நான் தெரிவித்து இருந்தேன். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக எந்த விசாரணை நடத்தினாலும் நான் தயாராக இருக்கிறேன். முறைகேடு நடைபெற்றதாக கூறும் அதே கம்பெனியிடம் 2021 வரை தொடர்ந்து மருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ரங்கசாமி தலைமையிலான பா.ஜ.,-என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது என்பதால், விசாரணையை 2021ம் ஆண்டுவரை மருந்து வாங்கியது குறித்தும் விசாரிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு முதல்வரை உட்படுத்த தயாரா என பா.ஜ.,வும், என்.ஆர்., காங்., பதில் சொல்ல வேண்டும். தற்போது ஆளும் ஆட்சி திறமை இல்லாத ஆட்சி என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார். அவருடன் தொடர்பில் அமைச்சர் ஜான்குமார், அவரது மகன்கள் உள்ளனர். அவர்கள் மீது, பா.ஜ., நடவடிக்கை எடுக்குமா? இதே கேள்வியை என்.ஆர்.காங்., பொதுச்செயலர் ஜெயபாலும் கேட்டுள்ளார். புதுச்சேரியில் பா.ஜ., மூன்று அணியாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பா.ஜ., இரண்டாவது 'பி டீம்' ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மூன்றாவது அணியாக மல்லாடி கிருஷ்ணாராவ் செயல்பட்டு வருகின்றனர். என்.ஆர்.காங்., கட்சி பா.ஜ.,வுடன் கூட்டணியா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அவர் கூட்டணியை விட்டு வெளியேறினால், அடுத்த நிமிடம் திகார் சிறையில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை