ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த புதிய ஆப் போக்குவரத்து ஆணையர் தகவல்
புதுச்சேரி: ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த இந்தாண்டு இறுதிக்குள் புதிய செயலி அமல்படுத்தப்படும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிய உரிமம் பெறாமல் டூ-வீலர், ஆட்டோக்கள், தனியார் சேவை வாகனங்களை சிலர் வாடகைக்கு விடுகின்றனர்.சுற்றுலா பயணிகளை, குறி வைத்து நடத்தப்படும் இச்செயல், மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு முரணானது; தண்டனைக்குரிய குற்றமாகும்.அந்த வாகனங்களை பற்றி முன்னரே அறிந்திராத புதிய நபர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் அதை இயக்கும் போது விபத்து சமயங்களில், உபயோகிப்பாளர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.இந்த வாகனங்களை போக்குவரத்து துறையின் உரிமம் பெற்ற பின்னரே, வாடகைக்கு விட வேண்டும். உரிய உரிமம் இல்லா மல், வாடகைக்கு விடப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்வது மட்டுமின்றி, குற்ற வழக்கும் தொடரப்படும்.ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த, பெங்களூரு மற்றும் கோல்கட்டாவில் நடைமுறையில் உள்ள செயலியை, இந்தாண்டு இறுதிக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், இச்செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.