| ADDED : நவ 21, 2025 05:48 AM
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் புகார் ஆணையத்திற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க ஆணையம் நீதிபதி ராஜசூர்யா தலைமையில் செயல்பட்டு வந்தது. தற்போது, இந்த ஆணையத்திற்கு புதிய நிர்வாக குழுவை நியமித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரி போலீஸ் புகார் ஆணைய தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி தலைவராகவும், நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோகன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயகுமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டாகும். இந்த ஆணையத்தில் போலீஸ் அதிகாரிகளின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவரின் சார்பாக அதிகாரம் பெற்றவர், அல்லது தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், போலீஸ் துறை சார்பில் புகார் அளிக்கலாம். இதுமட்டுமின்றி எந்த வகையினாலும் அறியப்படுகின்ற ஒழுங்கீனங்களை தானே முன்வந்து புகார்களை பதிவு செய்து ஆணையம் விசாரிக்கலாம். மேலும், போலீஸ் அதிகாரிகள் மீதான புகாரின் அடிப்படையில், தனி நபரிடமோ அல்லது அதிகாரம் படைத்தவரிடமோ தகவல்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடலாம். புகாரினை விசாரித்தபின் முடிவினை எடுப்பதற்கு தேவைப்பட்டால், போலீஸ் தலைமையகத்தில் வேறு ஏதேனும் கூடுதல் தகவல்கள் இருப்பின் கேட்கப்பெற்று மறு ஆய்வு செய்து முடிவுனை எடுக்கலாம். நேரடியான விசாரணை செய்து, முடிவினை போலீஸ் தலைமையகத்திற்கு அனுப்பி அதன் மீது வழக்கு பதிவு செய்யும். அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவிடும். உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரியை சேர்ந்தஅசோகன் ஏற்கனவே மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய தலைவராகவும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.