புதிய அரசு பதவியேற்பு விழா சட்டசபை அறைகள் புதுப்பிப்பு
புதுச்சேரி: புதிய அரசு பதவியேற்பு விழாவையொட்டி சட்டசபையில் உள்ள அறைகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி நடந்தது. அதில், தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்., 12, பா.ஜ., 4, அ.தி.மு.க., 1, ல.ஜ.க., 1 ஆகிய இடங்களில் வெற்றிப்பெற்றன.இதையடுத்து, தே.ஜ., கூட்டணி சட்டசபை தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகம், அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் அறைகள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. சட்டசபை வெளி பகுதியில் சுத்தம் செய்து, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.