உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் :பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் குவிப்பு

 புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் :பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் குவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி, 1,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கடந்த 20ம் தேதி முதல் தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரிக்கு வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் புதுச்சேரியில் உள்ள அனைத்து சாதாரண விடுதிகள், ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்டுகள், ஹோம் ஸ்டே ஆகியவை நிரம்பிவிட்டன. புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலுார், விழுப்புரம், திண்டிவனம், பொம்மையார்பாளையம், கோட்டகுப்பத்தில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். இன்று மாலை 5:00 மணி முதல் கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். சுற்றுலாத்துறை சார்பில், கடற்கரை சாலையில் 2 இடங்களில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இது மட்டுமின்றி டிரோன் ஷோ, வாண வேடிக்கை, லேசர் ஷோ ஆகியவையும் நடக்கிறது. புத்தாண்டையொட்டி, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியிலும், 500 போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர். நகர பகுதியில் நாளை மதியம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் ஒயிட்டவுன் பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 70 இடங்களில் கண்காணிப்பு மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, போலீசாருக்கு பணி ஒதுக்கீடு குறித்த, ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., கலைவாணன் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி, பேசியதாவது: புதுச்சேரியில் கடற்கரை சாலையில் நாளை மாலை முதல் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து விடாமல் இருக்க டேக் அணிவிக்க வேண்டும். அதில் பெற்றோர் பெயர், செல்போன் எண் இடம் பெற்றிருக்கும். தனியாக குழந்தைகள் இருந்தால் அந்த எண்ணை அழைத்து குழந்தையை ஒப்படைக்க வேண்டும். நள்ளிரவு 12:30 மணிக்கு இசை நிகழ்ச்சி நிறைவுபெறும் கடற்கரையில் கூடியுள்ள மக்களை சிறிது சிறிதாக பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். கூட்டத்தில் போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ள புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று மாலை வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் ராம் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்