நியமன எம்.எல்.ஏ.,க்களையும் அரசு விழாக்களுக்கு அழைக்க வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு நிர்வாக சீர்திருத்த துறை குட்டு
புதுச்சேரி: நியமன எம்.எல்.ஏ.,க்கள் விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிர்வாக சீர்திருத்த துறைசுற்றறிக்கை வாயிலாக அதிகாரிகளை எச்சரித்துள்ளது.புதுச்சேரி சட்டசபையில் 30 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களும், 3 நியமன எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கென, தனி தொகுதி இல்லாத போதும் தொகுதி மேம்பாட்டு நிதியும் சரிசமாகவே 2 கோடி ரூபாய் தரப்படுகிறது.இருப்பினும், நியமன எம்.எல்.ஏ.,க்களை அதிகாரிகள் சரி சமமாக நடத்துவதில்லை. பொது விழாக்களுக்கு அவர்களை கூப்பிடுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் முதலியார்பேட்டை தொகுதியில் நடக்கும் விழாக்களில் தன்னை கூப்பிடுவதில்லை என அசோக்பாபு எம்.எல்.ஏ., சபாநாயகர் செல்வத்திடம் உரிமை மீறல் பிரச்னையை எழுப்பி இருந்தார். இந்நிலையில் நிர்வாக சீர்த்திருத்த துறை அவசர சுற்றறிக்கை ஒன்றை அரசு துறைகளுக்கு அனுப்பி, நியமன எம்.எல்.ஏ.,க்களை அழைப்பு பிரச்னையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக நிர்வாக சீர்த்திருத்த துறை செயலர் கண்ணன் பிறப்பித்துள்ள உத்தரவு: அரசுத் துறைகள், அவற்றின் துணை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாக்களுக்கு புதுச்சேரி எம்.எல்.ஏக்களை அழைப்பு விடுப்பது தொடர்பாக வழிமுறைகளை அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ளது. இருந்தபோதிலும், நியமனம் எம்.எல்.ஏ.,க்கள் வசிக்கும் தொகுதிகளில் சில சமயங்களில் பூமி பூஜை விழா, கட்டட திறப்பு விழா போன்ற அரசாங்க செயல்பாடுகளில் பங்கேற்க அழைக்கப்படுவதில்லை என்று துறையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.எனவே, ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வசிக்கும் சட்டசபையால் பரிந்துரைக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.,க்கள், தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், அத்தகைய தொகுதி தொடர்பான அரசாங்க அலுவலகங்கள் ஏற்பாடு செய்துள்ள அதிகாரப்பூர்வ பொது நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் அழைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன் மேடையில் போதுமான இருக்கை அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அழைப்பிதழில் பெயர் குறிப்பிடும்போது, சட்டசபை தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., க்களுக்கு அடுத்த நிலையில் நியமன எம்.எல்.ஏ., பெயர் அச்சிடப்பட வேண்டும். விழா தொடர்பாக சம்பந்தப்பட்ட நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக எந்தவொரு விதி மீறலும் தீவிரமாக பார்க்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.