நவீன பஸ் ஸ்டாண்டில் அதிகாரிகள் ஆய்வு நவம்பர் இறுதியில் திறக்க முடிவு
புதுச்சேரி : நவீன பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவாக முடித்து நவம்பர் மாதம் இறுதிக்குள் திறக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையடுத்து, ஜூலை 16ம் தேதி முதல் ஏ.எப்.டி.,திடலுக்கு புது பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அனைத்து பஸ்களும் ஏ.எப்.டி., திடலில் இருந்து இயங்கப்பட்டு வருகின்றது. இந்த ஒருங்கிணைந்த நவீன பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி வெகு விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, புதுச்சேரி பொலிவுறு வளர்ச்சி திட்ட தலைமை நிர்வாக அதிகாரி ருத்ர கவுடு, உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் புது பஸ் ஸ்டாண்டிற்கு நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கட்டுமான பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். ஆய்வு பணிகள் குறித்து, ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறும்போது, நவீன பஸ் ஸ்டாண்ட் கட்டும்பணி வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடித்து திறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொலிவுறு அம்சங்களை கொண்ட புதிய நவீன பேருந்து நிலையத்தில் பஸ்கள் நிறுத்த தாராள இடவசதி உள்ளது. இதுதவிர வணிக வளாகமும் மற்றும் இதர அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. அத்துடன் உள்ளூர் நகர போக்குவரத்து இயங்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்றனர்.