பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் ஒருநாள் பயிற்சி பட்டறை
புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன நுாலக வெளியீட்டு துறை, சமூக நுாலக தகவல் அறிவியல் முன்னேற்ற சங்கம் புதுச்சேரி கிளை சார்பில், தொடர் தரவு வடிவத்தை எண் தரவு வடிவமாக மாற்றுதல் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி பட்டறை நடந்தது. திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் கற்றல் வள மையத்தின் தலைமை அறிவுசார் பிரிவு அதிகாரி இளவழகன் துவக்கி வைத்தார். பிரெஞ்சு நிறுவன இயக்குநர் ரேனோ கோல்சன், சென்னை சமூக நுாலக தகவல் அறிவியல் முன்னேற்ற சங்க நிறுவனர் ஹரிகரன், தலைவர் வெங்கடாசலம், புதுச்சேரி கிளை தலைவர் சேவுகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். புதுச்சேரி பல்கலைக்கழக தலைமை நுாலகர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். பயிற்சி பட்டறையில் ஆவண பாதுகாப்பு முறைகள், நவீன டிஜிட்டல் மாற்ற நுட்பங்கள், டிஜிட்டல் வளங்களுக்கு மெட்டாடேட்டா உருவாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நரேந்திரன், ரமேஷ்குமார், கோபிநாத், அன்னபூரணி, கோபிநாத் ஸ்ரீகண்டன், நயனா நாயகர் ஆகியோர் டிஜிட்டல் தரவு வடிவம் குறித்த தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்தனர். பல்வேறு கல்வி நிறுவன ஆராய்சியாளர்கள், நுாலகர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் சந்தேகங்களை எழுப்பி விளக்கம் பெற்றனர். பயிற்சி பட்டறையை பிரெஞ்சு நிறுவன நுாலக வெளியீட்டு துறை தலைவர் சரவணன், புதுச்சேரி பல்கலைக்கழக நுாலக அறிவியல் துறை இணை பேராசிரியர் லீலாதரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.