புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை, குடும்பத்தினர் தானமாக அளித்தனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் உமா, 47. டைலர். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தன் தந்தை முருகேசன், 60, மற்றும் மகன்கள் தினேஷ்.28; சிவா.23, ஆகியோருடன் வசித்து வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன், உயர் ரத்த அழுத்த பிரச்னையால், மூளையில் சிக்கல் ஏற்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர், உமாவின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர்.இதைத்தொடர்ந்து, அவரது இதயம், நுரையீரல், இரு கண்களின் விழி வெண்படலம், இரு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்டவை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கப்பட்டன.உடனடியாக, சென்னை மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு இதயம், காவேரி மருத்துவமனைக்கு நுரையீரல், புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனைக்கு கல்லீரல் கொண்டு செல்லப்பட்டன.ஜிப்மரில் இரு நபர்களுக்கு, நேற்றைய தினமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இரு கண்களின் விழி வெண்படலம், ஜிப்மரில் பத்திரப்படுத்தப் பட்டுள்ளது.