| ADDED : ஜன 02, 2024 07:07 AM
புதுச்சேரி : புதுச்சேரி கடலில் குளித்தபோது மாயமான 4 மாணவர்களில், இரு மாணவிகள் உள்ளிட்ட மூவர் உடல் நேற்று கரை ஒதுங்கியது.புதுச்சேரி நெல்லித்தோப்பு, டி.ஆர். நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள்கள் மோகனா,17; லேகா,14; இருவரும், சுப்ரமணிய பாரதி அரசு பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் தனது தாய் மீனாட்சியுடன் நேற்று முன்தினம் மதியம் புதுச்சேரி கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட சென்றனர்.இவர்களுடன், குடும்ப நண்பர்களான எல்லப்பிள்ளைச்சாவடி, சாராதாம்பாள் கோவில் அருகில் வசிக்கும் முருகையன் மகன் நவீன், 17; பிளஸ் 2 மாணவர், அவரது நண்பர் சாரம், பாலாஜி நகர் மகி மகன் கிஷோர்,17; டிப்ளமோ கேட்டரிங் மாணவர் சேர்ந்து சென்றனர்.கடற்கரைக்கு சென்ற மாணவர்கள் 4 பேரும், மதியம் 12:45 மணிக்கு, சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் உள்ள கடற்கரையில், குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போழுது எழுந்த ராட்சத அலையில் சிக்கி நால்வரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடியும் இரவாகியும் யாரும் கிடைக்கவில்லை. ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, மாயமானவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று கடலில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு படையினர் வீராம்பட்டினம் கரையில் இருந்து 7 நாட்டிகல் மைல் துாரத்தில் மாணவி லேகா உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.மாணவர் கிஷோர் உடல் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையிலும், மாணவி மோகனா உடல் வீராம்பட்டினம் கடற்கரையிலும் நேற்று மாலை கரை ஒதுங்கியது. மீட்கப்பட்ட மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாயமான மாணவர் நவீனை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.