இரவில் வாழைத்தார்களை திருடி வியாபாரம்: போலீஸ் வாகன சோதனையில் சிக்கினார் பெயிண்டர்
திருக்கனுார்: திருக்கனுார் பகுதிகளில் தொடர்ந்து வாழைத்தார்களை திருடி வந்த பெயிண்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி அடுத்த திருக்கனுார் மற்றும் சுற்று வட்டாரங்களில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைதார்கள் அவ்வபோது, திருடு போனது. இதுகுறித்த புகார்களின் பேரில், திருக்கனுார் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஏட்டு துரைகண்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை அருகே மொபட்டில் வாழைத்தார்களுடன் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் கொடாத்துார், மணவெளி, புதுநகர் கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன்,38; என்பதும் பெயிண்டர் வேலை செய்து வருவதும், கடந்த ஒன்றரை ஆண்டாக வாரத்திற்கு 2 முறை மாலையில் சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழைத்தார்களை நோட்டமிட்டு, பின், அன்று இரவு மொபட்டில் சென்று, வாழைத்தார்களை அறுத்து, புதுச்சேரி நேரு வீதி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்று வருவதும் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், அவர் திருடி வந்த 4 வாழைத்தார்கள், மொபட் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். பின், வெங்கடேசனை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், வாழைத்தார் திருட்டில் வெங்கடேசனுக்கு உதவிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.