| ADDED : நவ 13, 2025 06:49 AM
புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம், 33 மாத 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் குடும்பத்துடன் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மிஷன் வீதி மாதா கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இளையவளவன் நோக்க உரையாற்றினார். இதில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், அரசு சம்மேளன ஆலோசகர் ஆனந்த கணபதி, கவுரவ தலைவர் பிரேமதாசன், அமைப்புச் செயலாளர் கலியபெருமாள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்க செயலாளர் வேளாங்கண்ணிதாசன், சகாயராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சங்க பொருளாளர் கணேஷ் நன்றி கூறினார். பின், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தினரை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி மாலை சந்தித்து பேசினார். அதில், ஊழியர்களின் கோரிக்கை குறித்த கோப்புகளை பார்வையிட்டு, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் நாஜீம், நாகதியாகராஜன், அரசு செயலர் கேசவன் ஆகியோர் உடனிருந்தனர்.