சம்பள பாக்கி வழங்காததால் பாசிக் நிறுவன கார் ஜப்தி
புதுச்சேரி: செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சம்பள பாக்கி வழங்காத பாசிக் நிறுவனத்தின் கார் நேற்று ஜப்தி செய்யப்பட்டது. தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் நிறுவனத்தில், கடந்த 2017-18 ம் ஆண்டு சாரம், பீட்டர் நகரில் இயங்கிவரும் இந்தியன் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த 18 பேர் செக்யூரிட்டி வேலை பார்த்தனர். இவர்களுக்கான சம்பளம் ரூ.14.80 லட்சத்தை பாசிக் நிறுவனம் தரவில்லை. இதுதொடர்பாக செக்யூரிட்டி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், பாசிக் நிறுவனம், செக்யூரிட்டி நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.27.33 லட்சத்தை வழங்குமாறு கடந்த 2021ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தாததால், பாசிக் நிறுவனத்தின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2022ல் பாசிக் நிறுவனத்திற்கு சொந்தமான இனோவா கார் மற்றும் லாரி ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் லாரி வேளாண் துறையை சேர்ந்தது என்பதால், ஜப்தி நடவடிக்கையை வேளாண் துறையினர் தடை பெற்றனர். இந்நிலையில், செக்யூரிட்டி நிறுவனம் புதுச்சேரி கோர்ட்டில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்ததை ஏற்று, பாசிக் நிறுவனத்தின் காரை ஜப்தி செய்து ஏலம் விட உத்தரவிட்டது. அதன்படி, கோர்ட அமினா குணசேகரன் நேற்று பாசிக் நிறுவன காரை ஜப்தி செய்ய தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கார் இல்லாததால், பாசிக் நிறுவனத்திற்கு சொந்தமான பி.ஒய்.01.பிபி.6666 பதிவெண் கொண்ட இன்னோவா காரை ஜப்தி செய்ததற்கான உத்தரவை அலுவலக வாயிலில் ஒட்டினார். அந்த உத்தரவில் ஜப்தி செய்த கார் வரும் 4ம் தேதி கோர்ட் வளாகத்தில் ஏலம் விடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.