மத்திய அரசின் சுகாதார திட்டம் பென்ஷனர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி: மத்திய அரசின் சுகாதார திட்டத்தை, விருப்பமுள்ளவர்ளுக்கு மட்டும் அமல்படுத்த, புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆனந்தராசன் அறிக்கை:மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கான நிலையான மருத்துவ அலவன்ஸ் ரூ.1,000, இம்மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிலையான மருத்துவ அலவன்சை உயர்த்தி ரூ.3,000 வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், கட்டாயமாக அலவன்ஸ் ரூ.1,000த்தை பிடித்தம் செய்து, அதற்கு பதிலாக மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்பது, ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும், மருத்துவ அலவன்சை பிடித்தம் செய்து, அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகளை தொடரலாம்.இத்திட்டம், புதுச்சேரி, வில்லியனுார், பாகூர் கருவூலகங்களுக்கு மட்டும் பொருந்தும், காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளுக்கு பொருந்தாது என்பதும் பாரபட்சமானது. அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கும் என்ற கட்டாய நிலையை, அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாகமும், சுகாதார துறை இயக்குனரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.