பா.ஜ., - என்.ஆர்.காங்., ஆட்சியால் மக்கள் துன்பப்படுகின்றனர் மா.கம்யூ., மாநில செயலாளர் குற்றச்சாட்டு
புதுச்சேரி : மத்திய பா.ஜ., அரசு மற்றும் புதுச்சேரியில் நடக்கும் பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி அரசின் மோசமான ஆட்சியால், மக்கள் துன்பப்படுவதாக, மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:மா.கம்யூ., கட்சியின், புதுச்சேரி மாநில அமைப்பு குழுவின், 24வது மாநாடு இன்றும், நாளையும் வில்லியனுாரில் நடக்கிறது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், தமிழக மாநில செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மத்திய பா.ஜ., அரசு மற்றும் புதுச்சேரியில் நடக்கும் பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி அரசின் மோசமான ஆட்சியால், மக்கள் துன்பப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாற்றுக்கொள்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளோம்.புதுச்சேரி அடையாளமாக திகழ்ந்த பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், அரசு சார்பு நிறுவனங்களை இந்த ஆட்சியாளர்கள் சீர் குலைத்து மூடும் முடிவை எடுத்துள்ளனர். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கவும், தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து கையெழுத்து பெற்று, அதனை முதல்வர் ரங்கசாமியிடம், மா.கம்யூ., வழங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.