காலி பணியிடங்களை நிரப்ப கோரி சுகாதாரத்துறை இயக்குனருக்கு மனு
புதுச்சேரி: சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி புதுச்சேரி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் சங்க செயலாளர் ஜெகநாதன் தலைமையில் நிர்வாகிகள் சுகாதார இயக்குனருக்கு மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதவாது:சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 16 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை கடிதம் அளித்து, பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக சுகாதார ஆய்வாளர் பதவிகளை நிரப்புவதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது. அந்த கோப்புகளில் ஒரு சில விளக்கங்கள் கேட்டு, சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு கோப்புகளில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து, மீண்டும் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. இது நீண்டகாலமாக பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதி வாய்ந்த சுகாதார உதவியாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் காலம் கடத்தாமல், காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பதவிகளை உடனடியாக, தகுதியான சுகாதார உதவியாளர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், சங்கத்தின் சார்பில் சுகாதார ஆய்வாளர் பதவிகளை நிரப்பும் வரை சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.