| ADDED : நவ 27, 2025 04:34 AM
புதுச்சேரி: நில மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அரசு கொறடா முன்னிலையில் கவர்னரிடம் மனு அளித்தனர். பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் வேல்முருகன்,65, என்பவர் தலைமையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள்நேற்று அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலையில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து, நில மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார். மனுவில், எங்களுக்கு சொந்தமான 2 எக்டர் 67 ஏர்ஸ் நிலம் கிருமாம்பாக்கம் ஆறுபடை மருத்துவமனை அருகில் உள்ளது. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற நாங்கள் பிரான்சில் வசிக்கிறோம். சொத்து மற்றும் இதர சொத்துக்களை பராமரிப்பதற்காக என்னுடைய உறவினருக்கு அதிகாரம் கொடுத்திருந்தோம். கடந்தாண்டு அவர், எங்களது சொத்தை சுத்தம் செய்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் இடையூறு ஏற்படுத்தினர். இது தொடர்பாக அவர்கள் மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்து, அதில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இருந்தும்அக்கும்பல் நிலத்தை அபகரிக்க முயன்று வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கொறடா மீது புகார் திடீர் வாபஸ் ஏன்?: பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வேல் முருகன் கூறுகையில், 'எனது சொத்து அபகரிப்பு பின்னணியில் அரசு கொறடா ஆறுமுகம் இருப்பதாக சொன்னார்கள். அதன் காரணமாக ஊடகத்தில் அவரை விமர்சித்து இருந்தேன். இந்தியா வந்து விசாரித்தபோது அவருக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என, தெரிய வந்தது. அவரிடம் மன்னிப்பு தெரிவித்தேன். அரசு கொறடா மீது கொடுத்து புகாரையும் வாபஸ் பெற்றுக்கொண்டேன்' என்றார்.