| ADDED : பிப் 11, 2024 02:08 AM
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. கஞ்சாவால், இளைஞர் சமுதாயம் திசைமாறி போனதை தாமதமாக உணர்ந்த புதுச்சேரி அரசு தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளூரில் கஞ்சா விற்குபவர்களை மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா சப்ளை செய்யும் கும்பலையும் போலீசார் பிடித்து காலாப்பட்டு சிறையில் தள்ளி வருகின்றனர்.இதையடுத்து, கஞ்சா விற்பனை முற்றிலுமாக குறையும் என போலீசார் நினைத்திருக்க, கஞ்சா விற்பனையோ ஏற்கனவே இருந்ததைவிட அமோகமாக பல மாநிலங்களுக்கு விரிவடைந்து வருகிறது.இதற்கு சிறையில் கிடைக்கும் ரவுடிகள் லிங்க்கே பெரிய காரணமாக உள்ளது என்ற தகவலை அறிந்து போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அண்மை காலமாக கஞ்சா பறிமுதல் செய்யப்படும்போதெல்லாம், சிறையில் உள்ள பெரிய ரவுடிகளும் கஞ்சா விற்பனையில் பின்னணியில் இருப்பது அம்பலமாகி உள்ளது.வெளிமாநில கஞ்சா வியாபாரிகளை பிடித்து போலீசார் சிறையில் அடைத்து வருகின்றனர். அப்படி சிறையில் அடைக்கும்போது, சிறையில் உள்ள உள்ளூர் பெரிய ரவுடிகளுடன் கஞ்சா வியாபாரிகளுக்கு நல்ல அறிமுகம் கிடைத்து விடுகிறது.அப்படியே கஞ்சா தொழில் பற்றி ரவுடிகள் ஆர்வமாக கேட்டுதெரிந்து கொள்கின்றனர். அங்கேயே கஞ்சா பாடத்தை, கஞ்சா வியாபாரிகள் எடுக்கின்றனர்.கஞ்சா தொழில் நுணுக்கத்தை முற்றிலும் கற்றுக்கொண்ட ரவுடிகள், 'இவ்வளவு லாபமா வருகிறது... அப்படியென்றால் நானும் கஞ்சா தொழிலில் ஈடுபடுகிறேன். எனக்கும் கஞ்சா சப்ளை செய். பிடிபட்டால் என்னை காட்டிக்கொடுக்க கூடாது' என்று கஞ்சா விபாபாரிகளுடன் டீல் பேசி, சிறையிலேயே தொழிலுக்கு பிள்ளையார் சுழி போடுகின்றனர்.கஞ்சா வியாபாரிகளுக்கு மொபைல் போனில் அசைன்மெண்ட் கொடுத்து, அவர்கள் இருக்கும் மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வரவழைக்க சொல்கின்றனர்.இதன்படி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய அளவில் கஞ்சா கடத்தி வரப்படுகின்றது. ஒரு கிலோ, 2 கிலோ என்ற அளவில் ஆயிரக்கணக்கானோர் வெளிமாநிலங்களில் இருந்து சுலபமாக கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்து, புதுச்சேரியின் எல்லையில் நுழைந்ததும், ரவுடிகள் சொல்லும் நபர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.இந்த வகையில் ஏராளமான அளவில் புதுச்சேரிக்கு கஞ்சா வருகிறது. அப்படியே போலீசார் கஞ்சா கும்பலை கைது செய்தாலும் சிறையில் உள்ள 'ரவுடிகள் லிங்க்'கை காட்டி கொடுப்பதும் இல்லை. துருவிதுருவி விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தும்போது இந்த பின்னணி தெரிய வந்து போலீசாரும் அதிர்ந்து போய்விடுகின்றனர்.வெளிமாநில கஞ்சா வியாபாரி கும்பலை பிடித்தால் மட்டும்போதாது. அவர்களை ரவுடிகளுடன் அடைக்காமல், தனி சிறையில் அடைத்தால் மட்டுமே கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க முடியும். இல்லையெனில் சர்வதேச லிங்க் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.