உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவர் தற்கொலை முயற்சி

பள்ளி மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவர் தற்கொலை முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர், கையை பிளேடால் கிழித்துக் கொண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஹால் டிக்கெட் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார். இவர் நேற்று காலை ஹால் டிக்கெட் வாங்க பள்ளிக்கு வந்தார். அப்போது திடீரென பிளேடால் தனது கையை கிழித்து கொண்டு முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், சக மாணவர்கள் மாடியில் இருந்து குதித்த மாணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாணவனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடியில் இருந்து விழுந்து விட்டதாக அவரது தாயாரிடம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் மருத்துவமனை சென்று பார்த்தபோது, மகன் பிளேடால் கிழித்துக் கொண்டது தெரியவந்து, அதிர்ச்சி அடைந்தார். தேர்வு பயம் காரணமாக குதித்திருக்கலாம் என, ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த தாய், பள்ளியில் ஏதோ நடந்துள்ளது என சந்தேகம் எழுப்பினார்.சிகிச்சை பெற்று வரும் மாணவரை சபாநாயகர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கலெக்டர் குலோத்துங்கன், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, வைத்தியநாதன், கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி நேரில் சந்தித்து பேசினர்.மாணவருக்கு உயர் சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினர். மாணவர் மாடியில் இருந்து குதித்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது.அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், 'மாணவர் தற்கொலை முயற்சிக்கு முழுமையான காரணம் தெரியவில்லை. மாணவரிடம் நானே விசாரித்தேன். பதில் கூறவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும். மாநில அல்லது சி.பி.எஸ்.இ., என எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் தேர்வு பயம் இருக்கும். அதனால், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை