மது கடைகள் நேரத்தை குறைக்க கவர்னரிடம் பா.ம.க., மனு
புதுச்சேரி : மதுபான கடைகளின் நேரத்தை குறைக்க வலியுறுத்தி கவர்னரிடம், பா.ம.க., மாநில துணை அமைப்பாளர் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், புதுச்சேரியில் மதுபான கடைகள் காலை 8:00 முதல் இரவு 12:00 மணி வரை இயங்குகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதிக்கின்றனர். கூலி மற்றும் விவசாய தொழிலாளர்கள் காலையிலேயே மது அருந்துவதால், வேலைக்கு செல்வதில்லை. மாணவர்கள் மத்திலும் மது, கஞ்சா புழக்கம் அதிகமாகி வருகிறது. எனவே, மதுபான கடைகளின் நேரத்தை மதியம் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை குறைத்து அரசு ஆணையிட வேண்டும். விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளால் அதிக வாகன விபத்துகள் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலை பணி முடிவடைந்தும் இதுவரை மதுபான கடைகள் அகற்றப்படவில்லை. கடந்த 2017ம் ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள் அகற்றப்பட்டன. அதுபோல், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மதுபான கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.