புது மணப்பெண் தற்கொலை போலீசார் தீவிர விசாரணை
காரைக்கால்: புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகிறனர். காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி கிரீன் கார்டன் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் ஹேமா,28; எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும், பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வரும் தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வமுத்துக்குமரன்,31; என்பவருக்கும் மே 23ம் தேதி திருமணம் நடந்தது. அதன்பிறகு செல்வமுத்துக்குமரன், ஹேமாவை பெங்களூருவிற்கு அழைத்து சென்றார். இந்நிலையில், ேஹமா தனது தாயை போனில் தொடர்பு கொண்டு, தன்னை சந்தேகப்பட்டு தனது கணவர் அடிப்பதாகவும், வேலைக்கு செல்லும்போது, வீட்டின் கதவை பூட்டிவிட்டு செல்வதாக கூறி அழுதுள்ளார். அதன்பிறகு ேஹமாவின் மொபைல் போனை செல்வமுத்துக்குமரன் உடைத்துவிட்டதால், , ஹேமாவை அவரது பெற்றோர் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதுகுறித்து ஹேமாவின் பெற்றோர், செல்வமுத்துக்குமரன் பெற்றோரிடம் விபரத்தை கூறினார். அவர்கள் பெங்களூரு சென்று கடந்த 7 ம் தேதி ஹேமாவை அம்மாபேட்டைக்கு அழைத்து வந்தனர். கடந்த 9 ம் தேதி ேஹமாவை, அவரது பெற்றோர் ஆடி மாதத்திற்காக காரைக்காலுக்கு அழைத்து வந்துள்ளனர். கடந்த 1ம் தேதி இருவீட்டாரிடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையில், செல்வமுத்துக்குமாருடன் சேர்ந்து வாழ முடியாது எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி காலை 9:00 மணிக்கு ேஹமா வீட்டின் அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ேஹமாவின் தாய் குமாரி அளித்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், ேஹமாவிற்கு திருமணமாகி 72 நாட்களே ஆவதால், வரதட்சணை கொடுமையா என்பது குறித்து தாசில்தார் தமிழ்விழி விசாரித்து வருகிறார்.