பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கு புகார்; அமைச்சர் சாய்சரவணன் குமார் மறுப்பு 8 பேரிடம் போலீசார் விசாரணை
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் பா.ஜ., பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர், 38. காமராஜர் நகர் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர். இவருக்கு, திவ்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு, இரவு, 11:45 மணியளவில் திரும்பிய போது, 5 பைக்குகளில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல், உமாசங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, தப்பியது.இதுகுறித்து அவரது தந்தை காசிலிங்கம் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உமாசங்கர் ராட்டிணம் உள்ளிட்ட பொழுது போக்கு உபகரணங்களை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். அதில், இவருக்கும், இதே தொழிலை செய்யும் மற்றொரு கும்பலுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.மேலும், நிலம் அபகரிப்பு தொடர்பாக ரவுடிகள் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலருடன் உமாசங்கருக்கு பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, உமாசங்கர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உமாசங்கர் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி கர்ணா மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால், அவரது கூட்டாளிகள் 8 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை புகார்
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட உமாசங்கரின் தந்தை காசிலிங்கம் லாஸ்பேட்டை போலீசில் அளித்த புகாரில், தனது மகன் உமாசங்கருக்கும், புதுச்சேரி பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன் குமார் மற்றும் அவரது உறவினர்களுக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வருகிறது. மேலும், குயில்தோப்பு இடம் சம்பந்தமாக சருதுருஜி என்பருக்கும் இடையேயும் நிலம் பிரச்னை உள்ளது. ஆகையால், தனது மகன் உமாசங்கர் கொலையில் இரு தரப்பினருக்கும் தொடர்பு இருக்கலாம் என, சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அமைச்சர் மறுப்பு
அமைச்சர் சாய் சரவணன்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், 'புதுச்சேரியில் உமாசங்கர் என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அவர் மீது 15க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும், குயில்தோப்பு இடத்தில் பிரச்னை இருந்ததாகவும் தெரிகிறது. ஒரு வார காலத்திற்கு முன் சிலர் அவரை கொலை செய்ய முயன்றதாகவும், லாஸ்பேட்டை போலீசில் புகார் அவர் அளித்தாகவும் கூறப்படுகிறது.தேவையின்றி, எனது பெயர் மற்றும் குடும்பத்தினர் பெயரை கெடுக்கும் வகையில், அவதுாறு பரப்புவது கண்டித்தக்கது. என்னுடைய தங்கை சட்டப்படி ஒரு இடத்தை வாங்கினார். அந்த இடத்தை உமாசங்கரும், அவரது தந்தையும் தங்களுடையது என சொல்லியதால், அதை கலெக்டர் விசாரித்து சட்டப்படி எங்களுக்கு உரிமையானதை எடுத்து கொடுத்தார். அத்துடன், எங்களுக்கும், அவருக்குமான பேச்சு முடிந்துவிட்டது. அதன்பின்பும், தேவையில்லாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர். கண்டிப்பாக அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம். கவர்னர், முதல்வர் மற்றும் டி.ஜி.பி.,யிடம் நான் புகார் அளிக்க உள்ளேன். தேவைப்பட்டால் சி.பி.ஐ., விசாரணை கூட வைத்து விசாரிக்கலாம்' என கூறி உள்ளார். போலீஸ் அலட்சியம் காரணமா?
கொலை செய்யப்பட்ட உமாசங்கர், கடந்த வாரம் தனது வீட்டை சுற்றிலும் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருப்பதாக லாஸ்பேட்டை போலீசில், சி.சி.டி.வி., கேமரா ஆதரங்களுடன் புகார் அளித்திருந்தார். ஆனால், அதன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியாக இருந்துள்ளனர். அந்த புகார் குறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், உமாசங்கர் கொலையை தடுத்திருக்கலாம் என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர். விசாரணை அதிகாரி மாற்றம்
கொலை செய்யப்பட்ட உமாசங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் எடுத்து செல்ல அவரது தந்தை காசிலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை நடத்திய சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம், தனது மகன் கொலை வழக்கை லாஸ்பேட்டை போலீசார் விசாரித்தால், நேர்மையாக இருக்காது. ஆகையால், வேறு போலீஸ் நிலையத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். தனது மகன் உமாசங்கர் ஏற்கனவே அளித்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, உமாசங்கர் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக, கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடைகள் அடைப்பு
பா.ஜ., பிரமுகர் கொலை சம்பவத்தால் லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து, தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் தனது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைத்துள்ளார்.