தனியார் பள்ளி மாணவர்களுக்கு உலக நடப்பு தெரியாது: சபாநாயகர்
புதுச்சேரி : தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ போன்று தான் இருப்பார்கள் என சபாநாயகர் செல்வம் பேசினார்.புதுச்சேரி பல்கலையில் நடந்த சர்வதேச உளவியல் மாநாட்டில் சபாநாயகர் செல்வம் பேசியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே பல்வேறு வித்தியாசம் உள்ளது. அவர்களின் சிந்தனைகள், செயல்களிலும் வித்தியாசம் இருக்கும். தனியார் பள்ளியை பொறுத்த வரை 9ம் வகுப்பு படிக்கும் போதே 10ம் வகுப்பு பாடத்தை முடித்து விடுகின்றனர். இதனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு உடல் ரீதியான பயிற்சியும், மனரீதியான பயிற்சியும் கிடைப்பதில்லை.பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகள் டாக்டர்கள், இன்ஜினியர்களாக வேண்டும் என்பதே எண்ணம். மாணவர்கள் காலை 7:00 மணிக்கு பள்ளிக்கு சென்று, இரவு 9:30 மணிக்கு தான் வீடு திரும்புகின்றனர். இதனால், தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பர்கள். அவர்களுக்கு உலக நடப்போ, பொது அறிவோ இருக்காது. அதே நேரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் ரீதியான பயிற்சியும், மன ரீதியிலான பயிற்சியும் கிடைக்கிறது.புதுச்சேரியில் சமீப காலமாக முதியோர் இல்லங்கள் பெருகி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 20 முதியோர் இல்லங்கள் உருவாகியுள்ளது. அங்கு தங்கியுள்ளவர்களின் குழந்தைகள் மாதம் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். ஆனால், பெற்றோருக்கு ஒரு வேளை உணவு அளிக்க முடியாதவர்களாக உள்ளனர். இதுபோன்ற மாநாடுகள் அவர்களின் சமுதாய கடமைகளை உணர்த்த வேண்டும் என்றார்.