வில்லியனுாரில் சிலம்பம் போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
வில்லியனுார்: வில்லியனுாரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். வில்லியனுார், தில்லை நகர், பூங்காவில் லயம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில், சிலம்பம் மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் அடவு முறைகளை தொடர்ந்து 45 நிமிடம் சுற்றி சாதனை படைத்தனர். சிலம்பம் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தேசிய நல்லாசிரியர் கலைமாமணி தண்டபாணி, வாஞ்சிநாதன் நற்பணி மன்ற நிறுவனர் ராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். குமுக்காயம் நண்பர்கள் வட்டம் நிறுவனர் பரசுராமன், கவிஞரேறு வாணிதாசனார் கலை இலக்கிய பேரவை தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காமாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் மோகித் ரவிக்குமார் பங்கேற்று சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார். நிகழ்ச்சியில் பெஸ்ட் பிரண்ட்ஸ் குழு தலைவர் சரவணன், வில்வம் பவுண்டேஷன் தசரதன், வாசவி கிளப் விஜயன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பஞ்சாட்சரம், சமூக சேவகர் தனசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை லயம் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் அன்புஜெகன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.