உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊசுட்டேரியில் இருந்து மீண்டும் குடிநீர் திட்டம் பொதுப்பணித்துறை ஆலோசனை

ஊசுட்டேரியில் இருந்து மீண்டும் குடிநீர் திட்டம் பொதுப்பணித்துறை ஆலோசனை

புதுச்சேரி: ஊசுட்டேரியை குடிநீர் திட்டத்திற்கு மீண்டும் பயன்படுத்துவது குறித்து புதுச்சேரி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள ஊசுட்டேரி, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் ஏரியாக உள்ளது. ஊசுட்டேரி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 850 எக்டரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி, புதுச்சேரி பகுதியில் 390 எக்டரில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 15.54 சதுர கிலோ மீட்டராகும். ஏரிக்கரையின் மொத்த நீளம் 7.28 கி.மீ., புதுச்சேரி நகர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை தலைதுாக்கியதால், ஊசுட்டேரியில் இருந்து தினமும் 2 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு வர 47.5 கோடியில் காங்., ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது. இதற்காக பொறையூரில் வாய்க்கால் பணியும் துவங்கப்பட்டது. ஊசுட்டேரியில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை சேகரிக்க ராட்சத தொட்டியில் சுத்திகரிக்கவும், அதன் பின் ஊசுட்டேரியில் இருந்து முத்திரையர்பாளையத்தில் உள்ள குடிநீர் நிலையத்திற்கு 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய்கள் பதித்து குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் பசுமை தீர்ப்பாயம் தலையீட்டினால், ஊசுட்டேரி, 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசாலும் 2014ம் ஆண்டு தமிழக அரசாலும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து ஊசுட்டேரி குடிநீர் திட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டு, அப்படியே கைவிடப்பட்டது. தற்போது ஊசுட்டேரியை குடிநீர் திட்டத்திற்கு மீண்டும் பயன்படுத்துவது குறித்து புதுச்சேரி அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை வாயிலாக பணிகள் முடுக்கிவிட்டுள்ளன. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் கவனத்திற்கு இந்த குடிநீர் திட்டம் குறித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களும் முதற்கட்ட கள ஆய்வினை நடத்தியுள்ளனர். விரைவில் இத்திட்டம் குறித்து கமிட்டியின் ஒப்புதல் பெற்று, பசுமை தீர்பாயத்தில் புதுச்சேரியின் குடிநீர் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஊசுட்டேரியில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, மத்திய ஆசியா, ஐரோப்பிய கண்டங்களில் இருந்தும், சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் எண்ணற்ற பறவையினங்கள் நவம்பர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை புதுச்சேரியின் ஊசுடேரிக்கு வலசை வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 130 வகையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன. ஊசுட்டேரி 3 மீட்டர் ஆழம் கொண்டுள்ளது. 540 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். எனவே, ஊசுட்டேரியின் குறைந்தபட்ச கொள்ளளவை பாதிக்காமல் கூடுதல் உபரி தண்ணீரை மட்டும் குடிநீரை பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் மட்டும் தினமும் 10 எம்.எல்.டி., வீதம் மூன்று மாதத்திற்கு எடுக்கலாம் என்பதே புதுச்சேரி அரசின் கணக்காக உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது நகர பகுதியில் வசிக்கும் 2 லட்சம் மக்களுக்கு குடிநீர் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ