சுத்தமான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி: சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, செயற்பொறியாளரை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில், பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலியார்பேட்டை, தேங்காய்திட்டு பகுதிகளில் கடந்த சிலமாதங்களாக குடிநீர் கலங்களாக வந்தது. இந்த குடிநீரை பயன்படுத்திய மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் ஆத்திரமடைந்த முதலியார்பேட்டை மற்றும் தேங்காய்திட்டு பகுதி மக்கள் நேற்று காலை 11 மணிக்கு மாசு கலந்த குடிநீர் கேனுடன் சென்று, சோனாம்பாளையம் பொது சுகாதாரக் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அனைவரும் அலுவலகத்தின் உள்ளே சென்ற பொதுமக்கள், அங்கிருந்த செயற்பொறியாளர் வாசுவை சிறைபிடித்து, அவரது அறைவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் கொண்டு வந்த மாசு கலந்த குடிநீர் கேனை அவரிடம் காண்பித்து, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, குடிநீர் அசுத்தமான வருவது தொடர்பாக, அதிகாரிகள் மூலம் அப்பகுதிகளில் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக செயற்பொறியாளர் உறுதியளித்தார். இதையேற்று பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு 12:30 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.