பொதுப்பணித்துறை ஊழியர் சங்கம் நாராயணசாமிக்கு கண்டனம்
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியில் பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதாக பொய்யான அறிக்கை வெளியிட்டதாக பொதுப்பணித்துறை பணியாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தனது ஆட்சியில் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.9,000 ஊதியம் உயர்த்தியதாக பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையில், முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்ற பிறகு தான், ரூ.3,200 ஆக இருந்த ஊதியம் படிப்படியாக ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதனை ரூ.27,000 ஆக உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஊழியர்களைத் தவறாக வழிநடத்தி, முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதுாறாகப் பேசி வருகின்றனர். இது ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அங்கன்வாடி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்தது போல், பொதுப்பணித்துறையில் உள்ள 1,500 காலிப் பணியிடங்களிலும் தற்போதைய வவுச்சர் ஊழியர்களையே முதல்வர் ரங்கசாமி நிரப்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.