புதுச்சேரி - பிரெஞ்சு இடையே கலாசார பரிமாற்றம் அவசியம் முதல்வர் ரங்கசாமி பேச்சு
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், இந்திய-பிரெஞ்சு திருவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று துவங்கியது.விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பேசியதாவது:புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறையானது சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. புதுச்சேரி மாநிலம், சுற்றுலாவில் உலக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியின் அழகு ரசிக்க வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.புதுச்சேரிக்கும் - பிரான்ஸ் நாட்டிற்கும் பழமையான தொடர்பு உள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்த தொடர்பை மேம்படுத்த வேண்டும். இருநாட்டிற்கும் இடையே உள்ள கலை கலாசார பரிமாற்றம் மிகவும் அவசியம். புதுச்சேரியில் பிரெஞ்சு கலை, கலாசாரம் பின்பற்றப்படுவது போல் பிரான்ஸ் நாட்டிலும் இந்திய கலாசாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்திய-பிரெஞ்சு திருவிழா நல்ல வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.