வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நல்ல முயற்சி. நம் நாட்டு வணிகம் போற்றிடுவோம். வாழ்க பாரதம்
நல்ல முயற்சி எல்லோரும் ஆதரிப்போம் வாழ்வோம் வாழவைப்போம் சிறு மற்றும் பெரிய வணிகர்களை பாதுகாப்போம் வாழ்க பாரதம்
புதுச்சேரி : வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு போட்டியாகபுதுச்சேரி வணிகர்களுக்கென்று தனி ஆன்லைன் செயலிஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் உள்ளூர் வணிகர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பலரும் வீட்டில் உட்கார்ந்தபடி ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அந்த பொருள் வீடு தேடி வரத் துவங்கிவிட்டன. ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில், குறிப்பாக புதுச்சேரியில் உள்ள சிறு வணிகர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரமும் மெல்ல மெல்ல கேள்விக் குறியாகி வருகிறது. தங்களுடைய தொழிலை மீட்டெடுப்பதற்காக புதுச்சேரி மாநில வணிகர்கள் தற்போது ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்களும் ஆன்லைனுக்கு மாறிவிட்டனர். புதுவை பஜார் என்ற செயலியை அவர்கள் உருவாக்கி அதில் புதுச்சேரியில் பெரும்பான்மையான வணிகர்களை இணைத்துள்ளனர். இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் அவர்களுக்குத் தேவையான எந்த பொருளையும் உடனடியாக ஆர்டர் செய்து வாங்கி விட முடியும். இந்த புதுவை பஜார் வலைதளச் செயலிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என, புதுச்சேரி வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்லைன் வர்த்தகத்துக்கான புதுவை பஜார் செயலியை வணிக கூட்டமைப்பு செயலாளர் முருகபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சித்திக் ரகுமான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்து, கூறியதாவது: பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் வருகையால் சிறு, பெரு வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு நம்ம ஊர், நம்ம கடை என்ற கொள்கையுடன் புதுவை பஜார் என்ற வலைதள செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் மூலம் புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள சுமார் 5 லட்சம் வணிகர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வியாபாரப் பணிகளை செய்யலாம். அனைத்துவித வியாபார செயல்பாடுகளுக்கான ஒன்-ஸ்டாப் என, சொல்லக்கூடிய வகையில் இந்த புதுவை பஜார் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் மொபைல் வழியாக டவுண்லோடு செய்து பொருட்களை ஆர்டர் செய்யலாம். முன்பதிவு மற்றும் அவசர சேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய வணிர்களுக்கென்று ஒரு ஆன்லைன் சேவை இல்லாததை பெரிய குறைவாக உணர்ந்தோம். அதன் காரணமாகவே இதனை துவக்கியுள்ளோம். பல வெளிநாட்டு நிறுவனங்கள் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கமிஷன் வசூலித்து நமது வணிகத்தை அதிக அளவில் பாதிக்க செய்கின்றன. இதனால் மக்களுக்கு 100 ரூபாயில் கிடைக்க கூடிய பொருள் 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு மாற்று தான் நம்முடைய புதுவை பஜார் செயலி. பெரிய நிறுவனங்களின் வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது. நீங்கள் விரும்பிய கடையை தேர்வு செய்து நியாயமான விலைக்கே பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ஆர்டர் செய்தால் உணவக விலைக்கே வீட்டிற்கு உணவு வந்து சேரும். சுற்றுலாப் பயணிகள் இந்த செயலியைப் டவுண்லோடு செய்து கொண்டால், வணிகம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு பெறலாம். உள்ளுர் வணிகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்' என்றனர்.
நல்ல முயற்சி. நம் நாட்டு வணிகம் போற்றிடுவோம். வாழ்க பாரதம்
நல்ல முயற்சி எல்லோரும் ஆதரிப்போம் வாழ்வோம் வாழவைப்போம் சிறு மற்றும் பெரிய வணிகர்களை பாதுகாப்போம் வாழ்க பாரதம்