உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதகடிப்பட்டு பள்ளிக்கு அருகில் மாட்டுச் சந்தை: மாணவர்கள் அவதி

மதகடிப்பட்டு பள்ளிக்கு அருகில் மாட்டுச் சந்தை: மாணவர்கள் அவதி

திருபுவனை : மதகடிப்பட்டில் நடக்கும் வாரச் சந்தையால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. மதகடிப்பட்டு சந்தை அருகில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை 135 மாணவர்கள் படிக்கின்றனர்.செவ்வாய்தோறும் பள்ளி அருகில் மாட்டுச் சந்தை நடப்பதால், பள்ளிக்கு செவ்வாய்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு, மாற்றாக சனிக்கிழமையில் பள்ளி இயங்குகிறது. சந்தைக்கு வரும் மாடுகளை இப் பள்ளி கட்டடத்தில் கட்டியும், இரவு நேரங்களில் பொது கழிப்பிடமாக மாற்றியும் பள்ளி வளாகம் முழுவதும் அசுத்தம் செய்து வருகின்றனர்.

மறு நாள் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் இந்த கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. சனிக்கிழமையில் பள்ளி இயங்குவதால் மாணவர்களுக்கு பால் வழங்க முடிவதில்லை. மேலும், அன்று பள்ளிக்கு வர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாதது குறித்து, பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கல்வித் துறை மூலம் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், தொல்லியல் துறை அறிவிப்பின்படி இங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ள இடம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், கோவிலைச் சுற்றி 100 மீட்டர் தொலைவுக்கு கட்டடங்கள் கட்ட தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பள்ளிக்கு சுற்றுச்சுவர், வகுப்பறைகள் கட்டும் பணி தடைபட்டுள்ளது. கடந்த 2009ல் இப் பள்ளியில் 295 மாணவர்களுக்கு மேல் படித்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 135 ஆக குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் பள்ளியை மூடும் நிலை உருவாகும். எனவே, மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பள்ளியை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி