52 சமுதாயக் கூடங்கள், 51 அங்கன்வாடிகள் புதிதாக கட்டுவதற்கு அரசு திட்டம்
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 52 சமுதாயக் கூடங்கள், 51 அங்கன்வாடிகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை குறித்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்: புதுச்சேரி நகரப் பகுதியில் 21 சமுதாயக் கூடங்கள், ஊரகப் பகுதியில் 15, காரைக்கால் ஊரகப்பகுதியில் 16 கூடங்கள் கட்டப்படும். புதுச்சேரி நகரப்பகுதியில் 22 அங்கன்வாடி கட்டடங்கள், ஊரகப் பகுதியில் 11, காரைக்கால் ஊரகப் பகுதியில் 18 அங்கன்வாடி கட்டடங்கள் கட்டப்படும்.நடப்பு நிதியாண்டில் உழவர்கரை நகராட்சிக்குள் பெரிய அங்காடி, பொது அங்காடி கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி நகரசபை பகுதியில் 34 கழிவறை தொகுப்புகளும், ஊரகப் பகுதியில் 20, காரைக்கால் ஊரகப் பகுதியில் 12 கழிவறை தொகுப்புகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. வில்லியனூரில் பழுதடைந்த அங்காடி கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் இந்த நிதியாண்டில் கட்டப்படும்.நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான வெங்கடசுப்பா ரெட்டியார் திருமண மண்டபம் இடிக்கப்பட்டு, இந்த நிதியாண்டில் புதிதாக கட்டப்படும். காரைக்காலில் தற்போது இடிந்த நிலையில் உள்ள நேரு அங்காடி முழுவதையும் இடித்துவிட்டு தனியார் பங்களிப்புடன் இந்த நிதியாண்டில் புதிய கட்டடம் கட்டப்படும். ஊரக சாலைகளை மேம்படுத்த நபார்டு வங்கியிடமிருந்து ரூ.30 கோடி கடன் பெறப்படும்.