| ADDED : செப் 09, 2011 12:16 AM
புதுச்சேரி : 'பொது இடங்களில் பேனர், கட் அவுட் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் தீபக்குமார் எச்சரித்துள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திரா நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 13ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடக்கிறது. புதுச்சேரி, மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. நன்னடத்தை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். புதுச்சேரியில் இருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ளதால் மாகி, ஏனாம் பகுதிகளுக்கு நன்னடத்தை விதிகளில் இருந்து விலக்கு அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். பொது இடங்களில் பேனர், கட் அவுட் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. போஸ்டர்களும் ஒட்டக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களின் அழகை சீர்குலைப்பதைத் தடுக்கும் சட்டம் புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் உள்ளது. எனவே, தேர்தல் முடிந்த பிறகு பேனர், கட் அவுட் வைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் பேனர், கட் அவுட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதைப்போல புதுச்சேரியிலும் நடவடிக்கை எடுக்கப்படும். லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் செலவுகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும். பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சட்டசபையில் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியுமா... என்ற கேள்விக்கு பதிலளித்த கலெக்டர், 'தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி சட்டசபையில் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது' என்றார். அமைச்சரவையை விரிவாக்கம் செய்யலாமா... என்ற கேள்விக்கு, 'தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று செய்யலாம். தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக ஆணையத்துக்கு கடிதம் எழுத வேண்டும்' என்று கலெக்டர் தெரிவித்தார்.