| ADDED : பிப் 04, 2024 04:33 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் ரூ. 70 லட்சத்தை உருளையன்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் செந்தில், ஆனந்த் ஆகியோர் நேற்று காலை 5:30 மணிக்கு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, சென்னை செல்லும் பஸ்சில் அமர்ந்திருந்த சந்தேக நபரை பிடித்து விசாரித்தனர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங்,40; என்பதும், புதுச்சேரி இளங்கோ நகரில் தங்கி, அண்ணா சலையில் மாதாஜி என்ற பெயரில் மொபைல்கடை நடத்தி வருவதாகவும், பையில் மொபைல் போன்கள் எடுத்து செல்வதாக கூறினார்.அவரது பையை போலீசார் பரிசோதித்தபோது ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடன், பீம்சிங்கை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் அளித்த ரூ. 70 லட்சம் ஹவாலா பணத்தை சென்னையில் ஒப்படைக்க எடுத்து செல்வது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் அளித்த தகவலின் பேரில் சென்னை, வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்த, பீம்சிங் வைத்திருந்த ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பீம்சிங்கை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.:
சபாஷ் போலீஸ்
பீம்சிங் ஹவாலா பணத்துடன் போலீசில் சிக்கியதும், தன்னை விடுவித்தால் இருவருக்கும் தலா ஒரு லட்சம் பணம் தருவதாக கூறினார்.பணத்திற்கு ஆசைப்படாத போலீசார் செந்தில், ஆனந்த் இருவரும், பீம்சிங்கை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.