கவர்னர் விழாவை புறக்கணித்த முதல்வர்: புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு
புதுச்சேரி: கவர்னர் ஏற்பாடு செய்த விழாவை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமியால், புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்கள, யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா, லோக் நிவாஸ் சார்பில், காமராஜர் மணி மண்டபம் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜிப்மர், பல் மருத்துவக் கல்லுாரி, புதுச்சேரி தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் பயிலும் 5 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநிலங்களின் கலைக் கலாசாரங்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமிக்கு மாலை 4:00 மணிக்கு நிகழ்ச்சிக்கு, 3:45 மணிக்கு தான் அவரது தனி அதிகாரியிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, விழாவை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தார். முதல்வரை தொடர்ந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் விழாவை புறக்கணித்தனர். கடற்கரையில் நடந்த புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் புறக்கணித்தனர். முதல்வர் விழாவை ஐ.ஏ.எஸ்.,க்கள் புறக்கணிப்பதும், கவர்னர் ஏற்பாடு செய்த விழாவை முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து இருப்பதும், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.