உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி அரிசி, சர்க்கரை வழங்காதது குறித்து கேள்வி

தீபாவளி அரிசி, சர்க்கரை வழங்காதது குறித்து கேள்வி

முதல்வர் ரங்கசாமி 'டென்ஷன்' புதுச்சேரி: தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு, முதல்வர் ரங்கசாமி டென்ஷன் ஆகினார். புதுச்சேரியில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சிவப்பு ரேஷன் கார்டு குடும்பத்தினருக்கு ஒவ்வொரு மாதமும் இலவச அரிசிக்கான பணம் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. மத்திய அரசு அரிசிக்கு பதில் பணம் வழங்குவதால், கடந்த என்.ஆர்.காங்., ஆட்சியில் மாநில அரசு சார்பில், இலவச அரிசி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. கடந்த காங்., ஆட்சியில் அரிசி கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், அரிசிக்கு பதில் பணம் வழங்க அப்போதைய கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். மத்திய அரசின் இலவச அரிசிக்கான பணமும், மாநில அரசின் இலவச அரிசிக்கான பணம் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. பணத்திற்கு பதில் அரிசி வழங்கும் பணி கடந்த மாதம் துவக்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக ரேஷன் கடைகள் திறந்து தீபாவளிக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அரிசி கொள்முதல் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், வீராம்பட்டினம் கடற்கரை முகத்துவாரம் அருகே ரூ. 46.16 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியிடம், தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை பல தொகுதியில் இதுவரை கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு, அரிசி சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. நகருங்க என கூறினார். எதிர்கட்சிகள், பொதுமக்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கின்றனர் என்றதற்கு, தெரிந்துகிட்டே கேட்கிறீங்க. படிப்படியாக தான் வழங்க முடியும் என கோபத்துடன் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி