மழை நிவாரணம் ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தல்
புதுச்சேரி: மழை நிவாரண தொகை ரூ. 5 ஆயிரம் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பு: பெஞ்சல் புயலால் பாதித்த அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த 2ம் தேதி அறிவித்திருந்தார்.இதற்காக நிதித்துறை அனுப்பிய கோப்பிற்கு, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்தார். அதனையொட்டி, மாகி பிராந்தியத்தை தவிர்த்து, புதுச்சேரி, காரைக்கால், ஏனாமை சேர்ந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் மழை நிவாரண தொகை நேற்று முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 3 லட்சத்து 54 ஆயிரத்து 726 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவர். இதன் மூலம் அரசு ரூ.177 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் செலவாகும்.இந்த நிதி மாநில அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.